கடந்த 2014ஆம் ஆண்டு எம்.எச்.17 விமானத்தை வீழ்த்திய ஏவுகணையை வழங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்ததற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக சர்வதேச புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போயிங் 777 நெதர்லாந்து தலைநகரில் இருந்து கோலாலம்பூருக்கு பறந்து கொண்டிருந்தபோது, ஜூலை 2014இல் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைனியப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலின் போது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து ஏவப்படும் வான்வழி ஏவுகணையால் தாக்கப்பட்டது.

இதன்போது, பயணிகள் மற்றும் பணியாளர்கள் அடங்களாக 298 பேர் உயிரிழந்தனர். இவர்களில், 196 பேர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள், மற்ற பயணிகளில் பலர் மலேசியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, பெல்ஜியம் மற்றும் பிற நாடுகளை சேர்ந்தவர்கள்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலையில் அப்பகுதியை கட்டுப்படுத்திய டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் மீது ரஷ்யா ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை கொண்டுள்ளது என்று கடந்த ஆண்டு தீர்ப்பளித்த நெதர்லாந்து நீதிமன்றத்தை கூட்டு விசாரணைக் குழு மேற்கோள் காட்டியது.

இராணுவ ஆதரவை வழங்குவதற்கான முடிவு ஜனாதிபதியிடம் உள்ளது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறிய பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை அது விபரித்தது.

‘பிரிவினைவாதிகளின் கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதாகவும், இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உறுதியான தகவல் உள்ளது’ என்று கூட்டு விசாரணைக் குழு மேலும். கூறியது.

ஆனால் அந்த கோரிக்கையில் எம்.எச்.17 விமானத்தை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்ட அமைப்பை வெளிப்படையாக குறிப்பிடுகிறதா என்பது தெரியவில்லை.

‘நாங்கள் வலுவான அறிகுறிகளைப் பற்றி பேசினாலும், முழுமையான மற்றும் உறுதியான ஆதாரங்களின் உயர் கட்டத்தை எட்டவில்லை’ என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, பெல்ஜியம், மலேசியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகள், ஐந்து நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களைக் கொண்டவை.

கடந்த ஆண்டு நெதர்லாந்து நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்றி, இரண்டு ரஷ்யர்கள் மற்றும் ஒரு உக்ரைனியர் கொலைக் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது.

ஆனால், தற்போது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரஷ்யா, அந்தத் தீர்ப்புகள் அவதூறு மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நிராகரித்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here