ஆப்கானிஸ்தானின் அச்சமற்ற சம்பியன்’ என பாராட்டப்பட்ட முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் காபூலில் தங்கியிருந்த சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 32 வயதான முர்சல் நபிசாதாவும் ஒருவர்.

அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் அவரது பாதுகாவலரும் உயிரிழந்தார். மேலும், அவரது சகோதரரும் இரண்டாவது பாதுகாவலரும் காயமடைந்தனர்.

முன்னாள் சட்டமியற்றுபவர் மரியம் சோலைமான்கில் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வலிமையான, வெளிப்படையாகப் பேசும் பெண், ஆபத்தின் போதும் கூட, தான் நம்பியதைக் கடைப்பிடித்தார். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அவர் தனது மக்களுக்காக நாட்டிலேயே தங்கி போராடத் தேர்ந்தெடுத்தார்’ என்று பதிவிட்டார்.

2021இல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பொது வாழ்வின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

காபூல் பொலிஸ்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here