பிரான்ஸ் அரசாங்கம் மூன்று லட்சம் யூரோ பெறுமதியான மயக்க மருந்து மற்றும் சுவாச நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
இந்த மருந்து தொகையை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்டு, உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லிடம் கையளித்துள்ளார்.
நெருக்கடியான காலத்திற்கு ஏற்ற இந்த அன்பளிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த நன்றியை தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
பிரான்ஸ் அரசாங்கம் வழங்கியுள்ள மனிதாபிமான உதவியான இந்த மருந்து தொகையின் பெறுமதி 11 கோடி இலங்கை ரூபாவுக்கும் அதிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு இன்மை காரணமாக மருந்து உட்பட அத்தியவசிய மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான மருந்துகள் நோயாளிகள் மூலமாக தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்யப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், இந்தியா, பிரான்ஸ் உட்பட வெளிநாடுகள் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன.