நாடாளுமன்றத்தின் ஆதரவில்லாத போதும், 1940 இல் தேசிய அரசாங்கத்தை நிறுவி வெற்றி பெற்ற இங்கிலாந்தின் பிரதமரான வின்ஸ்டன் சேர்ச்சிலின் சாதனையை இலங்கையின் ரணில் விக்கிரமசிங்க முறியடிப்பாரா?
வின்ஸ்டன் சேர்ச்சில்- ரணில்
பிரதமராக பதவியேற்ற பின்னர் நாடாளுமன்ற பெரும்பான்மை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த,ரணில் விக்கிரமசிங்க, வின்ஸ்டன் சேர்ச்சிலின் சாதனையை உதாரணம் காட்டியிருந்தார்.
இந்தநிலையில் ஐந்து முறை ஆட்சி புரிந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றில் ஒற்றுமையில்லாத நெருக்கடி மிக்க நேரத்தில் இந்த சவாலை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
இந்தவேளையில் அவருக்கு கடந்த நீண்ட ஆட்சி அனுபவம் உதவும் என்றே கருதலாம். இதற்கு முன்னதாக, முதலில் அவர் தனது பணிகளை உறுதியாக மேற்கொள்ள நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
இது பெரும்பாலும், நாட்டின் நலன் கருதி ரணிலுக்கு சாதகமாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் அனாதை மகிந்த
கடந்த நீண்ட கால ஆட்சி அனுபவத்தை கொண்டிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தாம் எடுத்த மோசமான முடிவு காரணமாக இன்று அரசியல் அனாதையாக்கப்பட்டுள்ளார்.
அவர், தமது நண்பர்கள், வன்முறையில் ஈடுபடவிருப்பதை அறிந்திருந்திருக்கவேண்டும்.
எனினும் அதில் தவறியமையால் இன்று கடற்படைத்தளத்தில் மறைந்திருக்கவேண்டியேற்பட்டுள்ளது.
அத்துடன் தமது ஆதரவாளர்களின் சொத்துக்களை எரியூட்டதையும், கொலை செய்யப்பட்டதையும் தடுக்கமுடியாது போய் விட்டது
பல மடங்கு பொன்னான வாய்ப்பு
தமது அரசியலில் அதிக தோல்விகளை கண்ட ரணிலுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு, இதுவரை அவருக்கு கிடைத்துவந்த வாய்ப்புக்களை விட பல மடங்கு பொன்னான வாய்ப்பாகவே கருதப்படுகிறது.
முன்னைய காலங்களை போன்றல்லாமல், அவரின் செயற்பாடுகளை எதிர்க்கும் அளவுக்கு அனுபவம் உள்ள அரசியல்வாதிகள் இன்று இல்லை என்பது இதற்கு காரணமாகும்.
எனவே அவரால் சர்வதேசத்துடன் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என்றே நம்பப்படுகிறது.
இதில் அவர் வெற்றிப்பெற்றால் ”யானை” மீ்ண்டும் இலங்கையின் அரசியலுக்குள் ஆழமாக கால்பதித்துவிடும்.
ரணில்- மகிந்தவின் துரோகம்
இது இவ்வாறிருக்க, ரணில் இல்லையென்றால் அடுத்து இலங்கை நாட்டில் அரசியல் தலைமைத்துவம் கொடுப்பது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதற்கு மகிந்த, ரணில் உட்பட்டவர்களும் காரணம் என்றே குற்றம் சுமத்தப்படவேண்டும்.
ஏனெனில் இலங்கையின் அரசியலில் அடுத்த கட்ட தலைவர்களை வளர்த்தெடுப்பதில் இவர்கள் இருவருமே முன்னிற்கவில்லை.
இருவரும் தமது நலன்களையே கருத்தி்ற்கொண்டு அரசியலில் செயற்பட்டு வந்தனர்.
இது, நாட்டுக்கு இவர்கள் இருவரும் செய்த அரசியல் துரோகமாகவே கருதவேண்டியுள்ளது.