அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மீள்குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ருவாண்டாவிற்கு முதலில் ஐம்பது புலம்பெயர்ந்தோர் அனுப்பப்படவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

டெய்லி மெயிலுக்கு அளித்த செவ்வியில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இந்த எண்ணிக்கையை வெளிப்படுத்தினார்.

ஒரு புதிய ஒப்பந்தத்தின்படி, பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் இப்போது ருவாண்டாவிற்கு மீள்குடியேற்றத்திற்காக விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள்.

ஆனால், இந்த கொள்கையை 160க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், கேன்டர்பரி பேராயர், எதிர்க்கட்சிகள் மற்றும் மூத்த கன்சர்வேடிவ் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர் தெரசா மே உட்பட பலர் பரவலாக விமர்சித்துள்ளனர்.

கொள்கையின் நெறிமுறைகள், சட்டபூர்வமான தன்மை, செலவு மற்றும் செயல்திறன் பற்றிய கேள்விகளை அவர்கள் ஒன்றாக எழுப்பியுள்ளனர்.

ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக பிரித்தானியாவில் உள்ள பல புகலிடக் கோரிக்கையாளர்கள் தலைமறைவாகி வருவதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இந்த அச்சுறுத்தல் காரணமாக ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகள் சபை கூறியது.

இருப்பினும், மே 2ஆம் முதல் 8ஆம் திகதி வரையிலான வாரத்தில் 792 புலம்பெயர்ந்தோர் சிறிய படகுகளில் வந்ததாக சமீபத்திய அரசாங்க புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here