ரஷ்யாவில் இராணுவம் தொடர்பான பல கட்டடங்களில் மர்மமான முறையில் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் தொடர்கின்றன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ரசாயனத் தொழிற்சாலைகள், இராணுவத்துக்கு ஆள் எடுக்கும் அலுவலகம் என தொடர்ச்சியாக ரஷ்ய இராணுவம் தொடர்பான கட்டிடங்கள் பல தீப்பற்றி எரிந்து வருகின்றன.
பாதுகாப்பு அமைச்சகத்தின் ஏவுகணை வடிவமைப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் தீப்பற்றியதில் 22 பேர் பலியாகியுள்ளார்கள். Perm என்ற இடத்தில் அமைந்துள்ள வெடி மருந்துகள் ஆலை ஒன்றில் மூன்று பெண்கள் பரிதாபமாக தீயில் எரிந்து பலியாகியுள்ளார்கள்.
ஆனால், ரஷ்யா இந்த தீவிபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறி வருகிறது. Dzerzhinsk என்ற இடத்தில் அமைந்துள்ள ரசாயன ஆலை ஒன்று பயங்கரமாக தீப்பற்றி எரிவதையும், அந்தத் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடுவதையும் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதுபோக, Nizhnevartovsk என்ற இடத்தில் அமைந்துள்ள இராணுவத்துக்கு ஆள் எடுக்கும் அலுவலகம் ஒன்றை சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கும் ஒரு காட்சியும் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவங்களுக்கும் உக்ரைனுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால், இது போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ரஷ்ய மக்கள், போரையோ, மக்களைக் கொன்று குவிப்பதையோ, ரஷ்யா தனிமைப்படுத்தப்படுவதையோ விரும்பவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.