இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும் காலகட்டம் வரும் பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடும் துயரத்தினை சந்தித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

விண்ணை முட்டும் விலைவாசியால் வசதிப்படைத்த செல்வந்தர்களே திக்குமுக்காடி நிற்கும் பொழுது சாதாரண மற்றும் அடிமட்ட மக்களின் நிலை சொல்லி அறிய வேண்டியதில்லை. நாளுக்கு நாள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தையே அடிமட்ட மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

எரிவாயு வரிசை, எரிபொருள் வரிசை, மண்ணெண்ணெய் வரிசை, சதொச வரிசை என நாளுக்கு நாள் வரிசைகளின் எண்ணிக்கையும் விலைவாசியும் அதிகரித்துச் செல்கிறதே தவிர இதற்கொரு தீர்வு கிட்டியப்பாடில்லை.

பால் மா இன்றி தத்தளிக்கும் கைக்குழந்தைகள், இலவசமாக சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட போஷாக்கு உணவான திரிபோஷ கூட பொருளாதார நெருக்கடியில் உற்பத்தி இடை நிறுத்தப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை.

இதன் காரணமாக எதிர்கால சந்ததியினரை போஷாக்கற்ற ஒரு பிரிவினராகவே பார்க்கப்போகின்றோம் என அண்மையில் கூட எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பொதுமக்களிடம் நாங்கள் கருத்து கேட்கும் போது அவர்கள் தமது துயரத்தினை இவ்வாறு எம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

நாளுக்கு நாள் விலைகள் அதிரிக்கின்றன, ஒவ்வொரு வியாபார நிலையத்தில் ஒவ்வொரு விலைகளில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அந்த விலைகளில் நாளுக்கு நாள் அதியுச்சத்தை அடைந்து வருவதாக ஒருவர் தெரிவித்தார்.

அதேசமயம், எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றை முதலாளிமார் பதுக்கி வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவதாகவும் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், இந்த நிலை இவ்வாறே நீடித்தால் இனி வரும் நாட்களில் ஒருவரை ஒருவர் பிடித்து உண்ணும் அந்த அவல நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here