இங்கிலாந்தில் நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் அனைத்து சட்டரீதியான கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ( Boris Johnson) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலவசமாக மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்றுப் பரிசோதனை நடைமுறையும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட் உடன் வாழ்வதற்கான திட்டத்தை அறிவித்துள்ள பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், எச்சரிக்கையுடனான அணுகுமுறையின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்தாலும் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய அபாயமுள்ளவர்களுக்கு மாத்திரமே இலவச கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் குறைந்த வருமானம் பெறுவோருக்கு தனிமைப்படுத்தல் கொடுப்பனவாக 500 பவுண்ஸ் கொடுப்பனவு வழங்கும் திட்டமும் இவ்வாரத்துடன் முடிவுறுத்தப்படவுள்ளது.

நோய்வாய்ப்படுவோருக்கான வேதன கொவிட் விதிகள் மேலும் ஒரு மாதத்திற்கு மாத்திரமே பொருந்தும் எனவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இலவச கொரோனா தொற்றுப் பரிசோதனைகளில் கொண்டுவரப்படும் மட்டுப்படுத்தல்கள் தொடர்பில் தொழிற்கட்சியும் சில சுகாதாரத்துறை நிபுணர்களும் தமது கரிசனைகளை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே கொரோனா தொற்றினால் அதிகம் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய குழுவினருக்கு மேலதிக பூஸ்டர் தடுப்பூசி மருந்தை வழங்கவுள்ளதாக பிரித்தானிய சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here