தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, நாளாந்தம் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது.
அதன்படி, இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுப் போக்குவரத்தும் இயங்காததால், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தமிழகம் முழுவதும் 1.20 இலட்சம் பொலிஸார் கடுமையான வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எவ்வாறிருப்பினும் பெட்ரோல், டீசல் நிரப்பு நிலையங்கள், மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், நாளிதழ் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை பொதி சேவைக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுக்குச் செல்வோரின் வசதிக்காக சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் அழைப்பு பத்திரிகைகளைக் காண்பிக்க வேண்டும் என்பதுடன், திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.