சம உரிமை வேண்டும் மற்றும் பெண்களுக்கு அரசாங்கத்தில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில், பெண்களை தலிபான்கள் சவுக்கால் அடித்ததாக கூறப்படுகின்றது.

நேற்று (புதன்கிழமை) காபூல் நகரில் ஒரு வீதியில் அணிவகுத்துச் சென்ற பெண்களை தடுத்து நிறுத்திய தலிபான்கள், சவுக்கால் அடித்தும் மின்சாரத்தை உமிழும் தடிகளால் தாக்கியதாகவும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் கூறுகின்றனர்.

தலிபான்கள் தங்கள் இடைக்கால அமைச்சரவையை அறிவித்த ஒருநாளுக்கு பிறகு இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள்ளாக நடைபெற்ற இரண்டாவது போராட்டம் இதுவாகும்.

பெண்களின் உரிமைகளுக்கு உறுதியளிப்பதாக தலிபான்கள் கூறியுள்ளனர், பெண்கள் படிப்பதற்கோ வேலைக்குச் செல்வதற்கோ தாங்கள் எதிராக இருக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இடைக்கால அரசாங்கத்தில் பெண்கள் விவகாரத்துக்கான அமைச்சரவையை நீக்கியுள்ளனர்.

கடந்த ஒகஸ்ட் 15ஆம் திகதி காபூலுக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து பொது சுகாதாரத் துறையில் உள்ளவர்களைத் தவிர, மற்ற அனைத்து பெண்களும், பாதுகாப்பு நிலைமை மேம்படும் வரை வேலைக்குச் செல்லக்கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

1990ஆம் ஆண்டுகளில் தலிபான்கள் அதிகாரத்தில் இருந்தபோது பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்ததற்கு பாதுகாப்பே முதன்மையான காரணம். இப்போதும் அந்த நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என பெண்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை தலிபான்கள் அறிவித்துள்ள புதிய இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் பெண்கள் பேரணி நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here