வெளிநாட்டு கூலிப்படையினரே ஹெய்ட்டி ஜனாதிபதியை படுகொலை செய்துள்ளனர் – பொலிஸார் தகவல்

ஓய்வுபெற்ற கொலம்பிய இராணுவத்தினர் அமெரிக்கப் பிரஜைகள் அடங்கிய வெளிநாட்டு கூலிப்படையொன்றே ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸிசினை கொலை செய்தது என ஹெய்ட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலம்பியாவைச் சேர்ந்த 26 பேரும் ஹெய்ட்டியைச் சேர்ந்த இரு அமெரிக்கர்களும் இந்தக் கொலையில் தொடர்புபட்டுள்ளனர் என ஹெய்ட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

17பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,இவர்களில் இருவர் அமெரிக்கப் பிரஜைகள் எனத் தெரிவித்துள்ள ஹெய்ட்டி பொலிஸார் எட்டு பேர் தப்பியோடியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

புதன்கிழமை அதிகாலையில் இனந்தெரியாதவர்கள் குழுவொன்று ஜனாதிபதியின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டது, ஜனாதிபதி 12 துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

காயமடைந்த அவரது மனைவி புளோரிடாவிற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை சந்தேக நபர்களையும் ஆயுதங்களையும் பொதுமக்களிற்கு காட்சிப்படுத்தியுள்ள பொலிஸார் எங்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்கு வெளிநாட்டவர்கள் வந்தனர் என தெரிவித்துள்ளனர்.

எட்டு கூலிப்படையினரை கைது செய்வதற்காக புலனாய்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் ஆறு பேர் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் எனத் தெரிவித்துள்ள கொலம்பிய அரசாங்கம் விசாரணைகளில் உதவுவதற்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்றது எப்படி?
போர்ட் ஒவ் பிரின்சின் மலைப்பகுதியில் உள்ள ஜனாதிபதியின் வீட்டிற்குள் இரவு ஒரு மணியளவில் சில நபர்கள் நுழைந்துள்ளனர்.

ஜனாதிபதியின் கொலைக்குப் பின்னர் வெளியான வீடியோ அவர்கள் நாங்கள் அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் என சத்தமிடுவதை காண்பித்துள்ளன.

இந்தத் தாக்குதலின் போது ஜனாதிபதியினது அறையும் படுக்கை அறையும் சூறையாடப்பட்டுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here