சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 61 இலங்கையர்களைக் கர்நாடகா மற்றும் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்த இலங்கையர்கள் தங்குவதற்கு உதவியதற்காக மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவின் மங்களூருவில் இருந்து 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 23 பேர் தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களைத் தவிர, முறையே ஏழு மற்றும் நான்கு முகவர்கள் என்ற அடிப்படையில் இரண்டு இடங்களிலிருந்தும் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக காவல்துறையினரின் கூற்றுப்படி, இலங்கை நாட்டவர்கள் மார்ச் மாதத்தில் கடல் வழியாக இந்தியாவுக்குள் பிரவேசித்துள்ளனர்.

சிறிது நேரம் மதுரையில் தங்கிய பின்னர், அவர்களில் சிலர் பெங்களூருக்கும், பின்னர் மங்களூருக்கும் சென்றனர்.

இந்தநிலையில் தமிழக காவல்துறையினரின் தகவல் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக மங்களூரு நகர காவல்துறை ஆணையர் என் சஷி குமார் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட முகவர்களின் எந்த நாட்டவர்கள் என்ற தகவல் இன்னும் தமிழக காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்படவில்லை.

கர்நாடக காவல்துறையிடம் கிடைத்த தகவல்களின்படி, இலங்கையைச் சேர்ந்த ஒரு முகவருக்குக் கனடாவுக்கு அழைத்துச் செல்வதற்காக இலங்கை நாட்டவர்கள், இந்திய நாணயத்தில் சுமார் 3 லட்சம் ரூபாவை செலுத்தியிருந்தனர்.

இக்குழு தமிழ்நாட்டிலிருந்து கொள்கலன் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள் அல்லது தனியார் படகுகளில் கனடாவுக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here