பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடு பிரித்தானியாவில் உள்ள கார்ன்வால் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது. இந்த மாநாடு நாளை வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் ஐரோப்பிய ஓன்றியமும் கலந்துகொள்கிறது. இதுதவிர இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, தென்கொரியா நாடுகளுக்கு மாநாட்டில் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜி7 மாநாட்டில் முக்கியமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பேசப்படுகிறது.

இந்த உச்சி மாநாட்டை ஆரம்பித்துவைத்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் இதுகுறித்து கூறுகையில்,

‘கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்பதால் இந்தக் கூட்டம் நடந்தாக வேண்டும் என்பது எனது எண்ணம்.

தொற்று பரவ ஆரம்பித்த பின்னர் கடந்த 18 மாதங்களில் நாம் புரிந்த சில தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நோய்த்தொற்றால் நேர்ந்த பிரச்சினைகள் என்ன, இந்தத் தொற்று நீடித்த தழும்பானால் ஏற்படும் அபாயங்கள் என்ன, தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் ஏற்றத்தாழ்வுகளை ஆழமாக வேரூன்றியுள்ளதா என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து நாம் சிறந்த முறையில் மீண்டெழ வேண்டும். அதைச் செய்வதற்கான வாய்ப்பு நம்மிடம் உள்ளது. ஏனெனில் பருவநிலை மாற்றப் பிரச்னைக்கு தீர்வு, தூய்மையான பசுமையான உலகை நிர்மாணிப்பது உள்ளிட்டவற்றில் ஜி-7 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.

கடந்த 2008ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவது ஜி7 நாடுகளில் சீராக நடைபெறவில்லை. அப்போது நாம் இழைத்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்பது முக்கியம்’ என கூறினார்.

கேப்ரிஸ் பே கடற்கரை பகுதியின் கடலோர விடுதியில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, உலகத் தலைவர்கள் பிரித்தானிய ராணியுடன் இரவு உணவு அருந்தினர்.

கொரோனா தொற்றுக்கு பிறகு உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் முதல் ஜி7 மாநாடு இதுவாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here