எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பான பதிலளிப்பு முயற்சிகளுக்கு உதவும் நிமிர்த்தம் 100,000 அமெரிக்க டொலர்களை உடனடி உதவியாக அமெரிக்க மக்கள் வழங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும்,
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலானது சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் பிளாஸ்ரிக் சிதைவுகளையும், இரசாயன கழிவுகளையும் வெளியேற்றி கடலோர வளங்களையும் அருகிலுள்ள மீனவ சமூகங்களின் வாழ்வாதாரங்களையும் ஆபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த உதவியானது தற்போதைய அவசர நிலையில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியை வழங்கும் என்பதுடன், பதிலளித்து ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது அளிக்கப்பட்டு வரும் ஒத்துழைப்பையும் விரிவுபடுத்தும்.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் செயல்படுத்தும் பங்காளர்களின் ஊடாக அமெரிக்க இந்த உதவியை வழங்குகிறது.
எம் .வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்களைத் தணிக்க உதவுவதற்கு அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்க துணைநிலைத்தூதுவர் மார்ட்டின் கெலி தெரிவித்துள்ளார்.
‘இந்த உடனடி உதவியானது வாழ்வாதாரங்களுக்கு உதவும் என்பதுடன் தற்போதைய இந்த நிலைமையைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய சூழ்நிலையைச் சமாளிக்க மீனவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.