அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதை எளிதாக்குமாறு மத்திய அரசுக்கு சமூக ஆர்வலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை தடுத்து நிறுத்துவதற்காக நாடளாவிய ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் போடப்பட்டது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து முடங்கி உள்ளது.
இந்த மாதம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சரக்கு விமானங்கள், வந்தேபாரத் திட்ட விமானங்கள், இரு தரப்பு ஒப்பந்த விமானங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும், அவர்களின் குடும்பங்களும் அவசர காரணங்களுக்காக நாடு திரும்ப முடியாமல் எதிர்கொள்ளும் கஷ்டங்களை சுட்டிக்காட்டி, அவர்களின் பயணங்களை எளிதாக்குமாறு சமூக ஆர்வலரும், ‘ஜெய்ப்பூர் புட் அமெரிக்கா’ நிறுவனத்தின் தலைவருமான பிரேம் பண்டாரி, மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்சவர்தன் ஷ்ரிங்கலாவுக்கும், மத்திய சிவில் விமான போக்குவரத்து செயலாளர் பிரதீப் சிங் கரோலாவுக்கும், மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்க வாழ் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு வருவதற்கான பயணத்தை எளிமையாக ஆக்குவதை உறுதி செய்ய வேண்டும்.
விசா தகுதி மற்றும் தேவையான பயண முறைகள் குறித்து பயணிகளுக்கு கற்பிக்கும் தகவல்களில் அதிக தெளிவு இருக்க வேண்டும்.
மேலும், இரு தரப்பு ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் விமானங்களில் பயணிகளின் வெளிநாட்டு பாஸ்போர்ட், தகுதி வாய்ந்த விசாக்களை டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் சரிபார்த்துவிட வேண்டும்.
இந்திய பாஸ்போர்ட்டு வைத்திருப்போர், இந்திய வம்சாவளி அட்டைதாரர்கள், வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமைதாரர்கள், அமெரிக்காவில் பிறந்த தங்களுடைய 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் அவசர காரணங்களுக்காக நாடு திரும்ப அவசர விசாவுக்காக விண்ணப்பிக்காமல், முடிவடையாத விசாக்களுடன் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
இவற்றை செய்வது சிரமம் என்றால், அவசர விசா (புறப்பாட்டின்போது வழங்கும் அவசர விசா) அல்லது மின்விசா முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்” என அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார்