
ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் பிரித்தானியாவில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியாகியது.
அந்தவகையில் தற்போது பைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரவலான பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக பிரித்தானியா திகழ்கிறது.
இந்த நிலையிலேயே, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரத்தில் இருந்து, அந்நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் புடின் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.
மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.