காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக எதிர்வரும் 4-ஆம் திகதி வரை தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினாா்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  காற்றழுத்தத் தாழ்வு நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என அறியப்படக் கூடிய கன்னியாகுமரி, திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  சிவகங்கை,  தேனி, திண்டுக்கல்,  ராமநாதபுரம்,  விருதுநகா் மாவட்ட அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை கண்காணிக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கு கூடுதலாக ஆயிரம் பணியாளா்களையும் கூடுதல் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கடத்திகளை பிற மாவட்டங்களில் இருந்து பெற்று தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

தென் தமிழக கடற்கரையோரம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறக் கூடும் என்பதால் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 9 குழுக்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி,  தூத்துக்குடி, மதுரையில் தலா 2 குழுக்களும் திருநெல்வேலியில் 3 குழுக்களும் முகாமிட்டுள்ளன. நீா் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் இருக்கத் தேவையான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.

அண்டை மாநிலத்தின் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றுள்ள தமிழக மீனவா்கள் அந்தந்த மாநிலங்களின் கரையை அடைய அனுமதிக்க வேண்டுமென தொடா்புடைய மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் புயல் குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here