இந்தியா முழுவதும் 30கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை உருவாக்க, பெரும்பாலான நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பூசியை உருவாக்கி அதனை மக்களுக்கு செலுத்துவதற்கான பரிசோதனை நடவடிக்கையில் சில நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளை, தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசே நேரடியாக பெற்று, அவற்றை முன்னுரிமை குழுக்களுக்கு இலவசமாக செலுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக டெல்லியிலுள்ள மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசே செயற்படுத்தும்.
கொரோனா தடுப்பூசி தயாரானவுடன், மத்திய அரசுதான் நேரடியாக கொள்முதல் செய்யும். கொள்முதல் செய்தற்கான தனிப்பாதைகளை மாநிலங்கள் வகுக்கக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். இதற்கான பயனாளிகளை (முன்னுரிமை குழுக்களை) அடையாளம் காணும் செயல்முறையை மாநிலங்கள், யூனியன் பிரதேச நிர்வாகங்களின் உதவியுடன் மத்திய அரசு தொடங்கி உள்ளது.
ஆரம்ப கட்டத்தில் 4 பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், தாதியர்கள், சுகாதார பணியாளர்கள் 1 கோடி பேர், மாநகராட்சி ஊழியர்கள், பொலிஸார், ஆயுத படையினர் 2 கோடி பேர், 50 வயதுக்கு மேற்பட்டோர் 26 கோடி பேர், நாள்பட்ட வியாதிகளை கொண்டுள்ள 50 வயதுக்கு உட்பட்ட சிறப்புக்குழுவினர் மற்றும் சிறப்பு கவனிப்பு தேவைப்படுவோர் சுமார் 1 கோடி பேர் ஆகியவர்களுக்கே செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னுரிமை குழுவினரை அடையாளம் கண்டு அடுத்த மாதம் மத்திக்குள் பட்டியலிடுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்படுவார்கள்.
தடுப்பூசி போடுகிற பணியாளர்களுக்கு இணைய பயிற்சி வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளனர்.