பிரேஸிலில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் 1 மற்றும் 2ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரேஸில் நாட்டில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார்.

ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த 28 வயதுடைய தன்னார்வளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேஸில் அரசோ, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளிக்கவில்லை.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்த பிரேஸில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கவில்லை.

எவ்வாறிருப்பினும் பிரேஸிலில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here