நாட்டின் பொருளாதாரத்தை கொரோனா பிடியில் இருந்து மீட்கும் நடவடிக்கையாக உலகின் 15 முதன்மையான பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டைப் பெற பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் தருண் பஜாஜ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,“ கொரோனாவால் நாட்டின் பல்வேறு தொழில்கள் முடங்கி பொருளாதாரம் சரிந்துள்ள சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி அரசு பன்னாட்டு முதலீடுகளுக்கான கெடுபிடிகளை மேலும் தளர்த்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக 15 பன்னாட்டு முதலீட்டு அமைப்புகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மத்திய அரசு ஆறு விமான நிலைய பராமரிப்புகள் போன்றவற்றில் தனியாருக்கு இடமளித்துள்ளது. மேலும் ஆறு விமானநிலையங்களைத் தனியார் மயமாக்கவும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்காக புதிய கொள்கையை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு செயற்படுத்த இருப்பதாகவும் தருண் பஜாஜ் விளக்கமளித்துள்ளார்.