நியூசிலாந்து குடியுரிமை பெற்ற பெண்ணொருவர், இந்தியாவை சேர்ந்த நபர் தன்னை நிரந்தர வாழிட உரிமத்துக்காக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என புகார் அளித்துள்ளார்.
Fiji நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ருஹினா. இவர் நியூசிலாந்தில் நிரந்தர குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த குர்பீரித் சிங் என்பவர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அங்கிருந்தே தனது வழக்கறிஞர் மூலம் இந்திய பொலிசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், நான் குர்பீரித் சிங்கை கடந்த 2012 செப்டம்பர் இறுதியில் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் நியூசிலாந்தில் சந்தித்தேன்.
அந்த சமயத்தில் குர்பீரித் சிங் நியூசிலாந்தில் நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது.
இதன்பின்னர் என்னை திருமணம் செய்யவிரும்புவதாக கூறினார். ஆனால் நானும் என் குடும்பத்தாரும் அதற்கு சம்மதிக்கவில்லை.
பின்னர் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய அவர் என் மனதை மாற்றினார். இதையடுத்து நாங்கள் கடந்த 2014ல் திருமணம் செய்து கொண்டோம்.
இதன்பின்னர் கடந்த 2016-ல் குர்பீரித்தின் தாய் நியூசிலாந்துக்கு வந்தார். என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். இதையடுத்து என் மூலம் குர்பீரித்துக்கு நிரந்தர வாழிட உரிமம் கிடைத்தது.
இதையடுத்தே அவரின் சுயரூபம் வெளிப்பட்டது. என்னை குர்பீரித்தும் அவர் குடும்பத்தாரும் கொடுமைப்படுத்த தொடங்கினர்.
என்னிடம் இருந்து அதிகளவு நகைகள், பணத்தை மிரட்டி வாங்கி கொண்டனர். நான் அவர்களுடன் இந்தியாவுக்கு வந்த போதும் என்னை கொல்ல பார்த்தனர்.
வேறு பெண்ணை திருமணம் செய்ய போவதாக என் கணவர் குர்பீரித் சிங் மிரட்டுகிறார்.
தற்போது நான் நியூசிலாந்துக்கு வந்துவிட்டேன். என் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், நான் என் கணவரால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் மீது பொலிசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவேண்டும் என ருஹினாவின் வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார்.