டிராய் தலைவரின் தனிப்பட்ட தகவல்கள் ஆதார் டேட்டாவில் இருந்து எடுக்கப்பட்ட கிடையாது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் ஆர்.எஸ். ஷர்மா, டுவிட்டரில் தன்னுடைய ஆதார் எண்ணை வெளியிட்டு, அதை எவ்வாறு தவறாக பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டும்படி சவால் விடுத்தார். இதனையடுத்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹேக்கர் ஆன்டர்சன் அவருடைய தகவல்களை அடுக்கடுக்காக வெளியிட்டார். வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்காதது, பான் கார்டு என அனைத்து நிலை தகவலையும் வெளியிட்டார். இது ஆதார் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான கவலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி உங்களுடைய ஆதார் எண்ணை தெரிவிக்க முடியுமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் ஹேக்கர் ஆன்டர்சன்.
இந்நிலையில் டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மாவின் தனிப்பட்ட தகவல்கள் ஆதார் டேட்டாவில் இருந்து எடுக்கப்பட்ட கிடையாது என ஆதார் ஆணையம் (இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம், யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. சர்மாவின் தகவல்கள் ஆதார் டேட்டாவில் இருந்து சேகரிக்கப்படவில்லை. சர்மா சமூகத்தில் பிரபலமானவர். எனவே, அவருடைய முகவரி, பிறந்த தினம், தொலைபேசி எண், இமெயில் உள்ளிட்ட தகவல்கள் பொது தளங்களிலேயே உள்ளது. இப்போது வெளியிடப்பட்டுள்ளது அதில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களாகும் என  ஆதார் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறான செய்திகளால் மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆதார் டேட்டா மையம் பாதுகாப்பாக உள்ளது. விளம்பரங்களுக்காக ஆதார் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக பொய்யான செய்திகளை பரப்பப்படுகிறது. இது, வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்துக்கும், தனிப்பட்ட தகவல் பாதுகாப்புக்கும் இடையிலான சவாலாகும். இந்த சவால், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி பரிந்துரைக்கும் பரிந்துரைகள் மூலம் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here