இம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சரியான பொம்மையாக இருப்பார் என முன்னாள் மனைவி ரேஹம்கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி 115 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு (நவாஸ்) 64 இடங்கள் கிடைத்து உள்ளன. இந்த தேர்தலில் மோசடிகள் நடைபெற்று இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தனது தோல்வியை ஒப்புக்கொண்டது.
இது குறித்து நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிடுகையில் தங்களது கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என கூறினார். எனவே இம்ரான்கான் ஆட்சி அமைப்பதற்கான வழி பிறந்து உள்ளது. ஆட்சி அமைப்பது தொடர்பாக இம்ரான் கான் தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர் சார்பில் பிற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. இம்ரான்கானின் நம்பிக்கைக்கு உரிய ஜஹாங்கிர் கான் தாரினுக்கு சுயேச்சை எம்.பி.க்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது ஆதரவினை திரட்டுகிற பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் நம்பகத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்பப்படும் நிலையில், இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சரியான பொம்மையாக இருப்பார் என்று அவருடைய முன்னாள் மனைவி ரேஹம் கான் கூறியுள்ளார். இம்ரான் கானின் மனைவியும், பத்திரிக்கையாளருமான ரேஹம் கான், இந்திய பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் இப்படிதான் இருக்கும் என்று ஏற்கனவே எனக்கு தெரியும். தேர்தல் முறையாகவும், நியாயமானதாகவும் நடந்து இருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. கைபர் பதுன்க்வா பிராந்தியத்தில் இம்ரான் கானின் கட்சியை பற்றி அறிந்திராத நிலையில், அக்கட்சியின் வெற்றி சாத்தியமே கிடையாது.
 இதுபோன்று லாகூர், கராச்சியில் கூட அனுபவமிக்க வேட்பாளர்கள், அடையாளமே இல்லாத இம்ரான் கான் கட்சியின் வேட்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர் என்பதை நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் இந்தியா மற்றும் சீனா கொள்கையில் தன்னிச்சையாக செயல்பட்டார், அதனால்தான் ராணுவத்தின் அதிருப்தியை சம்பாதித்தார். இப்போதைய நிலையில் இம்ரான் கான், ராணுவத்தால் ஆட்டிவைக்கும் வகையிலான தலையாட்டி பொம்மைதான் இம்ரான் கான். சிக்கலான விஷயங்களில் அவருக்கு எந்த ஒரு அறிவும் கிடையாது, ராணுவத்தின் சொல்படிதான் இம்ரான் கான் நடந்தாக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ரேஹம் கான்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here