டி.என்.பில்.எல். கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணிவெற்றிபெற்றது.
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் நெல்லையில் இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் சார்பில் பரத் சங்கர், மணி பாரதி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தினை தந்த இந்த ஜோடியில், பரத் சங்கர் 29(23) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மணிபாரதி 33(29) ரன்களும், கேப்டன் பாபா அபராஜித் 17(14) ரன்னிலும் வெளியேறினர்.
அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் குமார், சரவணன் ஜோடி அதிரடியில் கலக்கினர். இதில் சரவணன் 52(28) ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசிபந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் சுரேஷ் குமார் 42(26) ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரகில் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில், அருண் கார்த்திக் மற்றும் கேப்டன் ரோகித் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் கேப்டன் ரோகித் 11(10) ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அருண் கார்த்திக்குடன், தலைவன் சர்குணம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தினால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இதில் அபாரமாக ஆடிய தலைவன் சற்குணம் 25 பந்துகளை சந்தித்து தனது அரை சதத்தினை பூர்த்தி செய்தார். இந்நிலையில் சற்குணம் 70(36) ரன்கள் எடுத்திருந்த போது கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய சந்திரன் 2(6) ரன்னிலும், கெளஷிக் 9(6) ரன்னிலும், தன்வார் 1(3) ரன்னிலும் வெளியேறினர்.

முடிவில் அபாரமாக ஆடிய அருண் கார்த்திக் 80(45) ரன்களும், சுப்ரமணியன் 1(4) ரன்னும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 18.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் சார்பில் கணபதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here