தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்றுவிப்பாளரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 18 நாட்களாக இடம்பெற்று வந்த மீட்புப் பணிகள் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
தாய்லாந்து நாட்டின் தாம்லுவாங் என்ற குகைக்குள் சாகசப்பயணம் மேற்கொண்ட 12 சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்றுவிப்பாளரும் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
அங்கு பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் குகைக்குள் புகுந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.
எனவே, கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் குகைக்குள் சிக்கித் தவித்த இவர்கள் 17 நாட்களாக வாழ்வா, சாவா என்ற நிலையில் போராடி வந்தனர்.
இந்த நிலையில், உள்நாட்டு மீட்புக் குழுவுடன் இங்கிலாந்தைச் சேர்ந்த நீச்சல் வீரர்களும் இணைந்து அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் காணாமற்போய் 9 நாட்கள் கடந்த பின்னரே அவர்கள் உயிருடன் இருப்பது இங்கிலாந்து வீரர்களால் கண்டறியப்பட்டது.
கட்டம் கட்டமாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இன்றைய தினம் ஐவர் மீட்கப்பட்டனர்.
8 பேர் நேற்று வரை மீட்கப்பட்டிருந்ததுடன், ஏனைய 4 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்றுவிப்பாளரை மீட்கும் நடவடிக்கைகளில் மேலும் 19 சுழியோடிகள் இன்று ஈடுபடுத்தப்பட்டனர்.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் சுழியோடிகளும், தாய்லாந்து கடற்படையைச் சேர்ந்த சுழியோடிகளும் அடங்கலாக 90 சுழியோடிகள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடும் பிரயத்தனங்களின் பின்னர் குறித்த சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தன்னார்வ சுழியோடி ஒருவர் இதன்போது உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.