சென்னையில் போலீஸ் காரரை கத்தியால் குத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடமுயன்ற ரவுடி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் பலியானார்.
சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றுபவர் ராஜவேலு (வயது 35). நேற்று முன்தினம் நள்ளிரவில் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு போலீஸ் கட்டுப் பாட்டு அறையில் இருந்து ஒரு தகவல் அனுப்பப்பட்டது.
ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப்பகுதியில் சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கலாட்டா செய்வதாகவும், அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. போலீஸ்காரர் ராஜவேலு தனியாக மோட்டார் சைக்கிளில் பி.எம்.தர்கா பகுதிக்கு விரைந்து சென்றார். அங்கு மது அருந்தி ரகளையில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தார்.
தனியாக வந்த அவரை ரகளையில் ஈடுபட்டவர்கள் திடீரென்று தாக்கினார்கள். அவர்கள் கத்தியால் ராஜவேலுவின் தலையில் சரமாரியாக குத்தினார்கள். கற்களாலும் தாக்கினார்கள். ராஜவேலு உயிர்பிழைக்க அங்கிருந்து ரத்தம் சொட்ட தப்பி ஓடினார். அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறி ராஜவேலு தப்பிச்சென்றார்.
பின்னர் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு 16 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டிருந்தது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும், துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்பேரில், ராயப்பேட்டை உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
போலீசார் விடிய, விடிய தேடுதல் வேட்டை நடத்தி போலீஸ்காரர் ராஜவேலுவை கத்தியால் குத்திய 6 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பி.எம். தர்கா பகுதியை சேர்ந்த சிறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் அரவிந்தன், ஜிந்தா என்கிற உதயநிதி, அஜித்குமார், வேல்முருகன், சீனு, மகேஷ் என தெரிந்தது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி ஆனந்தன் (25) உள்பட 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். 4 ரவுடிகளையும் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதற்காக கூடுதல் கமிஷனர் சாரங்கன் மேற்பார்வையில், துணை கமிஷனர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களை போலீசார் அழைத்து வரும்போது, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரவுடி ஆனந்தன் அவருடன் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்தார்.
அப்போது ரவுடி ஆனந்தனை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆனந்தன் மார்பில் ஒரு குண்டு பாய்ந்து பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் கூடுதல் கமிஷனர் சாரங்கன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ரவுடி ஆனந்தன் பலியான இடத்தை பார்வையிட்டனர். ரவுடி ஆனந்தனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ரவுடி ஆனந்தன் வி.எம்.தர்கா பகுதியை சேர்ந்தவர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரவுடி ஆனந்தன் துப்பாக்கி சூட்டில் பலியானது எப்படி? என்பது குறித்து கூடுதல் கமிஷனர் சாரங்கன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போலீஸ்காரர் ராஜவேலு மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் அவர் வைத்திருந்த வாக்கிடாக்கி கருவியை பறித்துச் சென்றுவிட்டனர். ராஜவேலுவை தாக்கிய ரவுடிகளில் 6 பேரை முதலில் கைது செய்துவிட்டோம். ரவுடி ஆனந்தன் உள்பட மேலும் 4 பேரை தேடிவந்தோம். அவர்கள் சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இரவு 8 மணியளவில் ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரும் சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
ரவுடி ஆனந்தனிடம், ‘ராஜவேலுவிடம் பறித்த வாக்கிடாக்கியை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?’, என்று விசாரணை நடத்தப்பட்டது. தரமணி பாலிடெக்னிக் கல்லூரி அருகே புதர் பகுதியில் மறைத்து வைத்துள்ளதாக ஆனந்தன் கூறினார். இதனால் ஆனந்தனை மட்டும் ஜீப்பில் ஏற்றி தரமணி பகுதிக்கு தனிப்படை போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
தரமணி பகுதியில் வாக்கிடாக்கியை தேடி கண்டெடுத்தனர். வாக்கிடாக்கியோடு அரிவாள் ஒன்றும் இருந்தது. வாக்கிடாக்கியை ரவுடி ஆனந்தன் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவிடம் எடுத்து கொடுத்துள்ளார். அப்போது அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்போது உதவி கமிஷனர் ரவுடி ஆனந்தனை எச்சரித்தார். உதவி கமிஷனரையும் ரவுடி ஆனந்தன் தாக்க முற்பட்டு உள்ளார்.
இதனால் தற்காப்புக்காக ரவுடி ஆனந்தன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் குண்டு பாய்ந்து ஆனந்தன் பலியாகிவிட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரவுடி ஆனந்தன் மீது 5 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனந்தனுக்கு ரஷீதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.
ரவுடி ஆனந்தன் போலீசாரால் ‘என்கவுண்ட்டர்’ செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.