சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்பு துறை மானியக்கோரிக்கையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
30 வயதிற்கு உட்பட்ட காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படும். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கான நல வாரியம் உருவாக்கப்படும். காவல்துறையில் புதிய பதவிகள் ரூ.13.51 கோடி செலவில் உருவாக்கப்படும்.
அதன்படி, ரூ.44.71 லட்சம் செலவில், காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் (அலுவலக கணினிமயமாக்கல்) பதவி ஒன்று புதியதாக தோற்றுவிக்கப்படும். ரூ.12.02 கோடி ரூபாய் செலவில் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு புதியதாக 3 கூடுதல் ஆயுதப்படை பிரிவுகள் உருவாக்கப்படும். ரூ.1.04 கோடி ரூபாய் செலவில் உயர்நீதி மன்ற மதுரை கிளைக்கு புதியதாக உருவாக்கப்படவுள்ள 3 கூடுதல் ஆயுதப்படை பிரிவுகளுக்கு அமைச்சுப்பணியாளர்கள் உருவாக்கப்படும்.
ரூ.119.73 கோடி செலவில் 1,397 புதிய காவல் வாகனங்கள் வாங்கப்படும். அதன்படி, ரூ.2.20 கோடி செலவில் 10 கலவர தடுப்பு வஜ்ரா வாகனங்கள் காவல்துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும். ரூ.1.76 கோடி செலவில், 8 கலவர தடுப்பு வஜ்ரா (தண்ணீரை பீய்ச்சி அடிக்கும்) வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் காவல் துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும்.
ரூ.6.50 கோடி செலவில் 10 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல்துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும். ரூ.3.25 கோடி செலவில் 5 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும்.
பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கலவரங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுண்ணறிவுப்பிரிவு மூலம் கூட்டம் கூடுவதை அறிந்து அதனை கண்காணிக்கும் விதமாக மென்பொருள் திட்டம் ஒன்று, ரூ.76 லட்சம் செலவில் சென்னையில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப கழகம் மூலம் உருவாக்கப்படும்.
இத்தொகை முதல் வருடத்திற்கு தொடரா செலவினமாக வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு வருடந்தோறும் ரூ.56 லட்சம் செலவில் செலவினமாக வழங்கப்படும். ரூ.3 கோடி செலவில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறை நெரிசலை ஒழுங்குபடுத்த ரூ.3 கோடியில் 2 ஆயிரம் நகரும் தடுப்புகள் வாங்கப்படும்.
ரூ.14.25 கோடி செலவில் காவல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க 475 காவல் நிலையங்களுக்கு இளையதளத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராவுடன் கூடிய தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும். ரூ.3.15 கோடியில் 105 காவல் நிலையங்களுக்கு கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும். ரூ.3.87 கோடியில் புல காவலிற்கான 129 மொபைல் உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள் வாங்கப்படும்.
ரூ.100 கோடி மதிப்பில் கழிவு செய்யப்பட்ட (பழைய) பல வகை வாகனங்களுக்கு பதிலாக 1,340 புதிய வாகனங்கள் வாங்கப்படும். ரூ.6.02 கோடி செலவில் 6 காவல் ஆணையரகங்கள், சென்னை நகரத்தில் உள்ள 4 சட்டம் மற்றும் ஒழுங்கு மண்டலங்கள் ஆகியவற்றின் உபயோகத்திற்காக 24 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வாங்கப்படும்.
கடலோர பாதுகாப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளரின் தலைமையிடம் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு மாற்றப்படும்.
சென்னை மாநில குற்ற ஆவணக்காப்பகத்தில் உள்ள காவல்துறை தலைவர் பதவியை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு மாற்றி காவல்துறை தலைவர் (பொது) என மறு பெயராக்கம் செய்யப்படும்.
ரூ.3.31 கோடி செலவில் அனைத்து மாவட்ட மற்றும் சிறப்பு படைப்பிரிவுகளில் காவல் வாத்தியக்குழுக்கள் உருவாக்கப்படும். ரூ.4.20 கோடி செலவில் காவலர்களின் பயிற்சிக்காக 19 வகையான சிறப்பு படைகலன்கள் வாங்கப்படும்.
ரூ.25 லட்சத்தில் வாயிற்படி உலோக கண்டுப்பிடிப்பிற்கான 5 கருவிகள், ரூ.45 ஆயிரம் செலவில் 5 நீட்டிப்பு கண்ணாடிகள் வாங்கப்படும். ரூ3.15 லட்சம் செலவில் 35 புரோடர் கருவிகள் வழங்கப்படும். 98 ஆயிரம் செலவில் வாகனத்தின் கீழ் தேடும் 14 கண்ணாடிகள், ரூ.4.95 லட்சம் செலவில் 55 தேடுதல் பணிக்கான விளக்குகள், ரூ.3 லட்சம் செலவில் 2 பகல் நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள், ரூ.15.60 லட்சத்தில் 2 இரவு நேர கண்காணிப்பு தொலைநோக்கு கருவிகள், ரூ.5.05 கோடி செலவில் பணித்திறன் மேம்பாட்டிற்காக 250 காவல் நிலையங்களுக்கென அடிப்படை சாதனங்கள், ரூ.12.20 கோடியில் அதிவிரைவு படைக்கு 14 வகையான சாதனங்கள் வாங்கப்படும். ரூ.4.07 கோடியில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் எண்ம முறையிலான முழு தகவல் தொடர்பு சாதனங்கள் நிறுவப்படும். ரூ.4.08 கோடியில் திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ம முறையிலான முழு தகவல் தொடர்பு சாதனங்கள் நிறுவப்படும். ரூ.55 லட்சத்தில் 100 எண்ம முறையிலான 800 மெகா ஹெர்ட்ஸ் கையடக்க சாதனங்கள் வாங்கப்படும். ரூ.80 லட்சம் செலவில் தமிழ்நாடு காவல் அகாடமிக்கு அனைத்து வகையான தடய அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வாங்கப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கட்டிடப் பராமரிப்புப் பணிக்கு சிறப்பு நேர்வாக ஒருமுறை 8 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். காவல்துறையில் உள்ளதைப் போன்று காவலர் அங்காடி வசதி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் அமைச்சு பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், 10 வருடம், 15 வருடம் மற்றும் 20 வருடம் எவ்வித தண்டனையும் இன்றி பணியாற்றும் பணியாளர்களுக்கு ரூபாய் 5, 8 மற்றும் 10 என வழங்கப்பட்டு வரும் நீள்பணி சிறப்பு ஊதியம் முறையே ரூபாய் 100, 160 மற்றும் 200 என உயர்த்தி வழங்கப்படும். இதன் தொடர் செலவினம் 42 லட்சம் ரூபாய் ஆகும். இத்திட்டத்தின் மூலம் 2,155 பணியாளர்கள் பயனடைவர்.
காஞ்சீபுரம் மாவட்டம், மகேந்திரா வேர்ல்டு சிட்டி நிறுவனத்தின் வளாகத்தில் ஓரூர்தி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் 1.25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். சேலம் மாவட்டம், கருமந்துறையில் ஓரூர்தி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் 1.25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
90 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர்
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவல் மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக்கோரிக்கையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். பின்னர் துறைவாரியாக அறிவிப்புகளை வெளியிட்டார். காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு மொத்தம் 90 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டபோது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.