காஷ்மீரில் ஐநா விசாரணையை இந்தியா அனுமதித்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நாங்களும் அனுமதிக்க தயார் என்று பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது.காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைமை ஆணையரால் அண்மையில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆகியவற்றில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், இதுகுறித்து சுதந்திரமான மற்றும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையை உள்நோக்கம் கொண்டது என்றும், பொய்கள் நிரம்பியது என்றும் இந்தியா விமர்சித்திருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தியாளர் முகமது பைசல், சுதந்திரமான மற்றும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைமை ஆணையர் பரிந்துரை செய்திருப்பதை வரவேற்பதாக கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறும் போது, “ ஜம்மு-காஷ்மீரில் விசாரணை நடத்த ஐ.நா. குழுவை இந்தியா அனுமதிக்கும்பட்சத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் விசாரணை நடத்த ஐ.நா. குழுவுக்கு ஏற்பாடுகள் செய்துதர எங்கள் நாடு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை” என்றார்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் தற்போது ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் சூழலை பாகிஸ்தான் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here