அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி, வல்லரசு நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக ஈரான் திகழ்ந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு அதிரடியாக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் அந்த நாடு வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

இந்த உடன்பாட்டின்படி, ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும்.

ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கு உடன்பாடு இல்லை. இந்த ஒப்பந்தமே, பைத்தியக்காரத்தனமானது என்பது டிரம்பின் கருத்து ஆகும்.

இந்த நிலையில், ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை, அந்த நாடு ரகசியமாக அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்து உள்ளது என்ற குற்றச்சாட்டை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ முன்வைத்து உள்ளார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் தகவல்களை வெளியிட்ட அவர், “ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டங்களுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது” என்று கூறினார்.

மேலும், “ஈரான் சிவில் அணுசக்தி திட்டங்களை மட்டுமே நிறைவேற்றப்போவதாக கூறியது. ஆனால், அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்ட நிலையிலும், ஈரான் ரகசியமாக அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றியது என்பதை எடுத்துக்காட்டுகிற பல்லாயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம்” என்று கூறினார்.

அத்துடன், “அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் போட்ட நிலையிலும் ஈரான், எதிர்கால பயன்பாட்டுக்காக அணு ஆயுதங்களை பாதுகாப்பதை, விஸ்தரிப்பு செய்வதை தொடர்ந்து வந்து உள்ளது. எதிர்காலத்தில் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லி விட்டு, இதை ஈரான் எதற்காக செய்ய வேண்டும்?” என்று பெஞ்சமின் நேட்டன்யாஹூ கேள்வி எழுப்பினார்.

ஆனால் இந்த கருத்துகளை ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷெரீப் நிராகரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “இது குழந்தைத்தனமானது. ஈரான் செய்துகொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடர்வதா, வேண்டாமா என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக பெஞ்சமின் நேட்டன்யாஹூ இப்படி சொல்லி இருக்கிறார்” என்று கூறினார்.

இருப்பினும் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் போம்பியோ, “ஈரான் செய்துகொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம், பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டது. இது மோசடியால் உருவானது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஆனது அல்ல” என்று சாடினார்.

ஈரான் அணு ஆயுத திட்டங்களை ரகசியமாக தொடர்ந்து வந்து உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறி உள்ளதைத் தொடர்ந்து, ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது பற்றி உங்களிடம் சொல்ல மாட்டேன். ஆனால் 12-ந் தேதியோ அதற்கு முன்னதாகவோ நாங்கள் முடிவு எடுப்போம்” என்று கூறினார்.

டிரம்ப் அறிவிப்பு, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால், நாங்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வோம் என்று ஈரான் ஏற்கனவே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here