கா்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டமன்ற தோ்தல் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடகாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மே 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளாா்.
இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக வேட்பாளர்கள் மற்றும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று(வியாழக்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார். நமோ ஆப்-ன் மூலம் நடைபெறவுள்ள இந்த ஆலோசனையில், அனைத்து பா.ஜ.க வேட்பாளர்கள், அலுவலக ஏஜெண்டுகள், தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் கட்சித்தொண்டர்களை பிரதமர் மோடி தொடர்பு கொள்ள உள்ளார்.
இதில் கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து கட்சியினருடன் மோடி முக்கியமாக விவாதிக்க உள்ளார். மேலும் தேர்தல் பிரசார உத்தி எந்த வகையில் இருக்க வேண்டும் என்பது குறித்து மூத்த கட்சித்தலைவர்கள், எம்.பி-கள், எம்.எல்.ஏ-கள் மற்றும் வேட்பாளர்களுக்கு மோடி ஆலோசனை வழங்க இருக்கிறார். மக்களிடம் பாஜகவின் திட்டங்களை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.
225 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் இழுபறியாகவே இருக்கும் என்று பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், வெற்றியை தங்கள் வசமாக்கிக்கொள்ள காங்கிரசும், பாஜகவும் முழுவீச்சில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கர்நாடகத்தில் மோடி மே 1-ம் தேதியன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார். 15 முதல் 20 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று மக்களைச் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் முடிவுகள் மே 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.