பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 117 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

மவுண்ட் மவுன்கானுய் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்தது.

கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 521 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டொம் லதம் 252 ஓட்டங்களையும் டெவோன் கோன்வே 109 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சொரிபுல் இஸ்லாம் மற்றும் எபொட் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொமினுல் ஹக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பங்களாதேஷ் அணி, 126 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, யாசிர் அலி 55 ஓட்டங்களையும் நுருல் ஹசன் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமீஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 395 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த பங்களாதேஷ் அணியை, நியூஸிலாந்து அணி போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 278 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதனால், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி,இன்னிங்ஸ் மற்றும் 117 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இதன்போது பங்களாதேஷ் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிடொன் தாஸ் 102 ஓட்டங்களையும் மொமினுல் ஹக் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கெய்ல் ஜேமீஸன் 4 விக்கெட்டுகளையும் நெய்ல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ, டேரில் மிட்செல் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நியூஸிலாந்து அணியின் தலைவர் டொம் லதம் தெரிவுசெய்யப்பட்டார்.

தொடரின் நாயகனாக, நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் டெவோன் கோன்வே (இரண்டு இன்னிங்சுகளில் 244 ஓட்டங்கள்) தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த போட்டியுடன் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஸ் டெய்லர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெற்றுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here