கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 11ஆவது மற்றும் 12ஆவது லீக் போட்டிகளில் முறையே கயானா அமசோன் வோரியஸ் மற்றும் சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

சென்.கிட்ஸ் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில், கயானா அமசோன் வோரியஸ் அணியும் ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கயானா அமசோன் வோரியஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கொலின் முன்ரோ 32 ஓட்டங்களையும் சுனில் நரேன் மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கயானா அமசோன் வோரியஸ் அணியின் பந்துவீச்சில், ரொமாரியோ செப்பர்ட் மற்றும் ஹபீஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சந்தர்போல் எம்ராஜ், நவீன் உல் ஹக் மற்றும் தஹீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 139 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கயானா அமசோன் வோரியஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஓட்ட எண்ணிக்கை சமநிலைப் பெற்றதால், வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சிம்ரொன் ஹெட்மியர் மற்றும் நிக்கலோஸ் பூரான் ஆகியோர் தலா 27 ஓட்டங்களையும் ரொமாரியோ செப்பர்ட் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், ரவி ராம்போல் 4 விக்கெட்டுகளையும் சுனில் நரேன் 2 விக்கெட்டுகளையும் அகில் ஹொசைன், கெர்ரி பியர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய கயானா அமசோன் வோரியஸ் அணி 6 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்பிறகு 7 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியால், 4 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் கயானா அமசோன் வோரியஸ் அணி வெற்றிபெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பாக பந்து வீசி அசத்திய ரொமாரியோ செப்பர்ட் தெரிவுசெய்யப்பட்டார்.


12ஆவது லீக் போட்டியில், சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியும் ஜமைக்கா தலாவாசும் பலப்பரீட்சை நடத்தின.

சென்.கிட்ஸ் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா தலாவாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கார்லோஸ் பிரத்வெயிட் 27 ஓட்டங்களையும் வோல்டன் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியின் பந்துவீச்சில், பிராவோ 3 விக்கெட்டுகளையும் மீ கீரன் மற்றும் டோமினிக் கிரேக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கொட்ரேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்.கிட்ஸ்- நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி, 17.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, செர்பேன் ருத்தர்போர்ட் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் எவீன் லீவிஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஜமைக்கா தலாவாஸ் அணியின் பந்துவீச்சில், பிடெல் எட்வட்ஸ், மிகேல் பெட்ரியோட்ஸ், ஆந்ரே ரஸ்ஸல் மற்றும் ரொவ்மன் பவல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக செர்பேன் ருத்தர்போர்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here