இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

பர்மிங்காமில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 303 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொறி பர்ன்ஸ் மற்றும் லோவ்ரன்ஸ் ஆகியோர் தலா 81 ஓட்டங்களையும் மார்க் வுட் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் மெட் ஹென்ரி 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் நெய்ல் வாக்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 388 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வில் யங் 82 ஓட்டங்களையும் டேவொன் கோன்வே மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோர் தலா 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஸ்டூவர்ட் புரோட் 4 விக்கெட்டுகளையும் மார்க் வுட் மற்றும் ஒலி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் லோவ்ரன்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

85 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 122 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூஸிலாந்து அணிக்கு 38 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்க் வுட் 29 ஓட்டங்களையும் ஒலி போப் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், மெட் ஹென்ரி மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் போல்ட் மற்றும் அஜாஸ் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 38 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

டொம் லதம் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களுடனும் ரோஸ் டெய்லர் ஓட்டமெதுவும் பெறாதநிலையிலும் களத்தில் இருந்தனர். டெவோன் கோன்வே 3 ஓட்டங்களுடனும் வில் யங் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஸ்டூவர்ட் புரோட் மற்றும் ஒலி ஸ்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்;டநாயகனாக மெட் ஹென்ரி தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகர்களாக நியூஸிலாந்தின் டெவோன் கோன்வேயும் இங்கிலாந்தின் ரொறி பர்ன்சும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி, 123 மதிப்பீட்டு புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here