விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த, ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப்பெற்றுள்ளது.

செம்மண் தரையில் நடைபெற்ற சிறப்பு மிக்க இத்தொடரில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாசை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதலிரண்டு செட்டுகளை 7-6, 6-2 என்ற கணக்கில் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ் கைப்பற்றினார்.

இதையடுத்து நடைபெற்ற செட்டுகளில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், தொடர்ந்து 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டார்.

இந்த வெற்றியானது பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஜோகோவிச், பெற்ற சம்பியன் பட்டமாகும். முன்னதாக 2016ஆம் ஆண்டு முதல் முறையாக பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.

இதுதவிர நோவக் ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக பெற்ற 19ஆவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டம் இதுவாகும்.


இதேபோல நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், செக் குடியரசின் பார்போரா கிரெஜ்கோவா, ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-1 என்ற செட் கணக்கில் பார்போரா கிரெஜ்கோவா, கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய அனஸ்தேசியா பவ்லியுசென்கோவா, செட்டை 6-2 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது.

இதில் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடிய பார்போரா கிரெஜ்கோவா, மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் பார்போரா கிரெஜ்கோவா முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு முத்தமிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here