ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.

செம்மண் தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது பெண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இதில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியொன்றில், செக் குடியரசின் பார்போரா கிரெஜ்கோவா, கிரேக்கத்தின் மரியா சக்கரியை எதிர்கொண்டார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் பார்போரா கிரெஜ்கோவா, கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய மரியா சக்கரி 6-4 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் விறுவிறுப்படைந்தது.

இதில் விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடிய பார்போரா கிரெஜ்கோவா, மூன்றாவது செட்டை 9-7 என்ற கணக்கில் கைப்பற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.


இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியொன்றில், ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவா, ஸ்லோவேனியாவின் தமரா ஸிதான்செக்குடன் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டை அனஸ்தேசியா பவ்லியுசென்கோவா, 7-5 என போராடிக் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், அனஸ்தேசியாவுக்கு தமரா பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கிய அனஸ்தேசியா, இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றி இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.


நாளை நடைபெறும் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவும் பார்போரா கிரெஜ்கோவாவும் மோதவுள்ளனர்.

எவ்வாறாயினும் இப்போட்டியில் வெற்றிபெறும் வீராங்கனை முதல் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கிண்ணத்துக்கு முத்தமிடுவார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here