ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
பிரித்வி ஷா 7 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்னிலும், ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் தவான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது. தவான் 61 பந்தில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே எல் ராகுல், மயங்க் அகர்வால் இறங்கினர்.
ராகுல் 15 ரன்னிலும், அகர்வால் 5 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கிறிஸ் கெயில் ஒரே ஓவரில் 24 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் 29 ரன்னில் வெளியேறினார்.
நிகோலஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 28 பந்தில் 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 32 ரன் எடுத்து அவுட்டானார். ஹுடாவும் நீஷமும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணியின் 4வது வெற்றி ஆகும்.