வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற வங்காளதேச அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
வங்காளதேச கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை வெஸ்ட்இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேச அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் வகித்தன. இந்நிலையில் பாசட்டெரேவில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி, வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், மற்றும் அனாமுல் ஹாக் ஆகியோர் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 35 ஆக இருக்கும் போது அனாமுல் (10 ரன்கள்) ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேற, ஷகிப் அல் ஹசன் களத்திற்குள் நுழைந்தார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்நிலையில் ஷகிப் 37 ரன்களில் ஆஷ்லே நர்ஷ் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய முஷ்பிகுர் ரகிமும் சிறிது நேரத்தில் நடையை கட்ட முகமதுல்லா, தமிம் இக்பாலுடன் கை கோர்த்தார். இதனிடையே அதிரடியாக ஆடி வந்த தமிம் இக்பால் சர்வதேச ஒரு நாள் போட்டித்தொடரில் தனது 11-வது சதத்தை பூர்த்தி செய்தார். வங்காளதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தமிம் இக்பால் (103 ரன்கள் 127 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) பிஷோ பந்து வீச்சில் வெளியேறினார். இதனிடையே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வந்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 301 ரன்கள் குவித்தது. முகமதுல்லா 67 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜாசன் ஹோல்டர், ஆஷ்லே நர்ஷ் 2 விக்கெட்டுகளையும், ஷெல்டான், பிஷோ ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 53 ஆக இருக்க லெவிஸ் (13 ரன்கள்) மொர்டசா பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்ததாக ஷாய் ஹோப் களமிறங்கினார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தில் ஈடுபட கெய்ல் (73 ரன்கள்) அவுட் ஆகி வெளியேறினார். இதற்கு பின்னர் மைதானத்திற்குள் நுழைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சீரான இடைவெளியில் தனது விக்கெட்டுகளை பறிகொடுக்க, கடைசி நேரத்தில் அந்த அணி வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனிடையே சிறப்பாக பந்து வீசி வந்த வங்காளதேச அணி வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் வெற்றிக்கான முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற வங்காளதேச அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. வெஸ்ட் அணி வீரர் ரோவ்மேன் பொவல் 74 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்காளதேச அணி தரப்பில் மொர்டாஷா 2 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரகுமான், ருபெல் ஹோசைன் மற்றும் மெகிடி ஹாசன் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்த தொடரில் 287 ரன்கள் சேர்த்துள்ள வங்காளதேச அணியின் வீரர் தமிம் இக்பால், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here