நடத்தை விதிமுறையை மீறியதால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குணதிலகா 6 சர்வதேச போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது.
இலங்கை–தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. போட்டி முடிந்ததும் இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். எதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணி வீரர்கள் தங்கி இருந்த ஓட்டல் அறையில் குணதிலகாவுடன், அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி தங்கிய அவரது நண்பர் ஒருவர் நார்வே நாட்டு இளம்பெண்ணை கற்பழித்த புகாரில் இலங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் குணதிலகாவிடம் விசாரணை நடத்தினர். தான் தூங்கி கொண்டு இருந்ததால் நண்பர் என்ன செய்தார் என்பது தனக்கு தெரியாது என்று போலீசாரிடம் குணதிலகா தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின. இந்த சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் குணதிலகாவிடம் விசாரணை நடத்தியது. அதில் அவர் வீரர்களின் ஒப்பந்த விதிகளை மதிக்காமலும், வீரர்களின் நடத்தை விதிமுறைக்கு புறம்பாகவும் நடந்து கொண்டது உறுதியானது.
இதனை அடுத்து குணதிலகா 6 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.