அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதால் பெரிய நிம்மதி அடைந்து இருக்கிறோம் என மெஸ்சி மகிழ்ச்சி தெரிவித்தார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில், நைஜீரியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மெஸ்சி முதல் கோல் அடித்தார். உலக கோப்பை போட்டி தொடரில் ஒட்டுமொத்தத்தில் அவர் அடித்த 6-வது கோல் இதுவாகும். அவர் 2006 மற்றும் 2014-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் கோல் அடித்து இருந்தார். இதன் மூலம் மூன்று உலக கோப்பை போட்டியில் கோல் அடித்த 3-வது அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஏற்கனவே மரடோனா (1982, 1986, 1994), கேப்ரியல் பாடிஸ்டுடா (1994, 1998, 2002) ஆகியோர் மூன்று உலக கோப்பை போட்டியில் கோல் அடித்து இருந்தனர்.வெற்றிக்கு பிறகு அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி அளித்த பேட்டியில், ‘குரோஷியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கண்ட தோல்வியால் நிலைகுலைந்து போனோம். இதற்கு முன்பு இதுபோன்ற மோசமான சூழ்நிலையை நாங்கள் சந்தித்தது இல்லை. இதனால் கடந்த சில நாட்களில் மிகவும் வேதனை அடைந்தோம். இருப்பினும் நைஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்பினோம். கடவுள் எங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை இருந்தது. நைஜீரியாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் மிகப்பெரிய நிம்மதியை அடைந்து இருக்கிறோம். போட்டி அட்டவணை இவ்வளவு சிக்கலாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை சந்திக்க இருக்கிறோம். அவர்கள் மிகவும் வேகமாக செயல்படக்கூடியவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களுக்கு எதிரான ஆட்டம் கடினமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here