பெங்களூரு அணிக்கெதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யாவின் த்ரோவில், விக்கெட் கீப்பரான இஷான் கிஷான் மைதானத்தில் வலியால் சிறிது நேரம் துடித்தார். நேற்றைய பெங்களூரு- மும்பை அணிகளுக்கிடையேயான போட்டியில் பரபரப்பான சம்பவங்கள் பல நடந்தன.  ஓட்டமே எடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 200-ஓட்டங்களுக்கு மேல் குவித்தது, அதன் பின்னர் பாண்ட்யா விவகாரத்தில் நடுவரிடம் கோஹ்லி வாக்கு வாதத்தில் ஈடுபட்டது போன்றவை நிகழ்ந்தன.

அந்த வகையில் நேற்றைய போட்டியின் இளம் வீரரான இஷான் கிஷானின் கண் நூலிழையில் தப்பியது.  ஆட்டத்தின் 13-வது ஓவரில் பெங்களூரு அணி வீரர் லெக் திசையில் பந்தை அடித்து விட்டு, ஓட்டங்கள் எடுத்தார். அப்போது இரண்டாவது ஓட்டத்திற்கு அவர்கள் ஓட முயற்சித்ததால், வேகமாக ஓடி வந்து பீல்டிங் செய்த பாண்ட்யா, பந்தை அதே வேகத்தில் கீப்பரான இஷான் கிஷானுக்கு வீசினார். ஆனால் பந்தானது எதிர்பாராதவிதமாக கீழே பட்டவுடன், அவரின் முகத்தை பதம் பார்த்தது. பந்தானது வந்த வேகத்தில் பட்டதால், இஷான் மைதானத்தில் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்து துடித்தார்.

அதன் பின் மருத்துவர் வந்து முதலுதவி சிகிச்சை அளித்து அவரை அழைத்துச் சென்றார். பந்தானது இஷான் மேல் பட்ட போது ஓட்டம் ஓடிக் கொண்டிருந்த கோஹ்லி, அதிர்ச்சியடைந்ததுடன் சக அணி வீரர்கள் மற்றும் மைதானத்திற்கு வெளியில் இருந்த வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர். போட்டி முடிவுக்கு பின் பேசிய ரோகித், இஷான் தற்போது நல்ல நிலையில் உள்ளார். அதிர்ஷ்டவசமாக அவரது கண்களில் பந்து படவில்லை, மருத்துவர்கள் 3 முதல் 4 நாட்கள் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று கூறியிருப்பதாக தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here