தாய்லாந்து குகை ஒன்றில் காணாமல் போன 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் ஆகியோர் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் பணிக்கு பிறகு குறித்த13 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், குகையில் நீர் மட்டம் அதிகரிப்பதால் அந்த சிறுவர்கள் நீருக்கடியில் நீந்தக் கற்கவேண்டும் அல்லது நீர் வடியும் வரை சில மாதங்கள் அங்கேயே காத்திருக்கவேண்டும் என தாய்லாந்து இராணுவம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிக் குழுவினர் உயரும் நீர் மட்டத்தில் போராடி, குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு உணவும் மருந்தும் கொண்டு சென்றதாகவும் இன்னும் குறைந்தது நான்கு மாதங்களுக்கு அவர்களுக்கு அங்கேயே உணவு விநியோகிக்கப்படும் எனவும் இராணுவம் கூறியுள்ளது.

குறித்த சிறுவர்கள் காணாமல் போன செய்தி நாட்டையே உலுக்கியிருந்ததுடன் அந்நாட்டு மக்கள் அவர்களை காப்பாற்ற மிகப்பெரியளவில் ஆதரவுக் கரம் நீட்டியிருந்தனர்.

11-16 வயது மதிக்கத்தக்க குறித்த சிறுவர்கள் தாம் லுவாங் குகையை சுற்றிப் பார்க்க ஜூன் 23 அன்று உள்ளே சென்றுள்ளனர்.

12 சிறுவர்களும் மூ-பா அல்லது காட்டுப்பன்றி என அழைக்கப்படும் கால்பந்து குழுவை சேர்ந்தவர்கள்.

அவர்களுடன் சென்ற 25 வயது துணை பயிற்சியாளர் இரண்டு வருடத்திற்கு முன்பும், அந்த சிறுவர்களை அந்த குகைக்கு அழைத்து சென்றிருந்தார்.

அந்த குழுவின் தலைமை பயிற்சியாளர், அந்த சிறுவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தொழில்முறை கால்பந்து வீரர்களாக வேண்டும் என்று விரும்பியதாகவும், அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுச் செல்ல மாட்டார்கள் என்று நம்புவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை தங்களது பணி, சிறுவர்களை தேடுவது, மீட்பது மற்றும் அழைத்து வருவது எனவும் இதுவரை தாங்கள் அவர்களை கண்டறிந்துள்ளதாகவும் அடுத்த பணி அவர்களை குகையில் இருந்து வெளியே கொண்டு வந்து வீட்டிற்கு அனுப்புவதாகும் என பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

குகையிலிருந்து நீரை வற்ற வைத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உள்ளே அனுப்பி சிறுவர்களின் உடல் நலத்தை சோதனை செய்யப்போவதாக தெரிவித்த ஆளுநர், சிறுவர்களின் உடல் நலம் அவர்களை வெளியே கொண்டு வரும் அளவிற்கு வலிமையாக இருந்தால் குகையிலிருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here