பாகிஸ்தானின் ஆளும் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னால் பிரதமருமான நவாஸ் ஷெரீப் இனிமேல் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு உச்ச நீதி மன்றம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.
முன்னதாக நவாஸ் ஷெரீஃப் பிரதமராகப் பதவி வகித்த போது அவரும் அவரது குடும்பத்தினரும் வெளிநாடுகளில் சட்ட விரோத சொத்துக்கள் வாங்கி இருந்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பனாமா பேப்பர்ஸ் என்ற பத்திரிகை ஆதாரத்துடன் செய்தியைக் கசிய விட்டிருந்தது. இதன் அடிப்படையில் உச்ச நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் தான் 2017 ஜூலை 28 ஆம் திகதி நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப் பட்டு அவரின் எம் பி பதவியும் பிரதமர் பதவியும் ஒன்று சேரப் பறிக்கப் பட்டது. எவ்வளவு காலத்துக்கு இந்தத் தகுதி நீக்கம் என நவாஸ் தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பதில் மனுவில் மேற்கொள்ளப் பட்ட விசாரணையின் தீர்ப்பு பெப்ரவரி 14 ஆம் திகதி ஒத்திப் போடப் பட்டது.
பின்னர் இதன் தீர்ப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப் பட்டது. இதன் போது தான் எம்பி ஒருவர் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப் பட்டால் அது நிர்ந்தரமானது தான் என்றும் அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளும் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளனர். 1990 இல் முதன் முறை பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற நவாஸ் ஷெரீஃப் அதன் பின் மொத்தம் 3 முறை பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.