சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடனாக 2.9 பில்லியன் டொலரைக் கோருகின்ற நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை இந்தியா வலுவாக ஆதரிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திடம் கூறியதாக கடந்த வாரம் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் இலங்கை மற்ற உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இதேபோன்ற உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் இன்று தெரிவித்துள்ளது.
போதுமான உத்தரவாதங்கள் பெறப்பட்டு, மீதமுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், கடனுதவி திட்டத்தை பரிசீலிக்கும்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
ஏழு தசாப்தங்களில் ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அவசியமான சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி உடன்படிக்கையை எட்டுவதற்கு, சீனா மற்றும் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு தேவைப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.