தை பொங்கல் என கூறிவிக்கொண்டு ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலம் இது என குற்றம் சாட்டியுள்ள அவர், மக்கள் பூர்வீகமாக விவசாயம் செய்த நிலங்கள் இராணுவத்திடம் சிக்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய தை பொங்கல் என்பது அரசியல் நாடகம் என்றும் இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும் என்றும் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்த ஜனாதிபதி ராணி ல்விக்ரமசிங்க, தேசிய பொங்கல் என கூறிக்கொண்டு தமிழர் தாயகத்தில் காலடி எடுத்து வைக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தைப்பொங்கல் என்பது பானையும், அரிசியும், அடுப்பும் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல உழைப்பாளரின் வியர்வை, அதனால் விளைந்த விளைச்சல் உழைப்பு, உழைப்புக்கு அடிப்படை காரணமான மண் அதனுடைய உரிமை கலந்த விடயமாகும். இதிலே வாழ்வும் வளமும் தங்கி இருக்கின்றது.

கலாசார சிறப்போடு தேச உணர்வும் அதன் பாதுகாப்பும் அதற்கான உறுதியும் மேலோங்கி இருக்கின்றது. இவற்றையெல்லாம் சிதைத்தழித்து தொடர் அழிவுகளுக்கும் திட்டமிட்டு கொண்டு தேசிய பொங்கல் என்று அதிபர் தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ நாம் எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது.

வியர்வை விதைத்த நிலம், உழுது விளைந்த நிலம், பொங்கலிட்டு மகிழ்ச்சியோடு உறவுகளோடு கூடி பகிர்ந்து உண்ட நிலம், இராணுவத்திடம் சிக்கி உள்ளது. அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலமிது.

இதற்கு மத்தியில் தேசிய தை பொங்கல் என அரசியல் நாடகம். இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும். தமிழர்களின் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கு போதை பொருட்களின் பாவனையும் எங்கும் வியாபித்துள்ளது.

இதற்குப் பின்னால் அரச படைகள் உள்ளதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். நாட்டில் வேறெந்த பிரதேசத்திலும் இல்லாத அளவிற்கு முப்படையினரும் காவல்துறையினரும் அவர்களுக்கு உதவியாக இரகசிய காவல்துறையும் அவர்களின் புலனாய்வாளர்களும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் பலமாக இருக்கும் போது போதை பொருட்கள் வடகிழக்கில் அதிகரித்துள்ளதென்றால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியது பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிபருமே.

இத்தகைய கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்தா அதிபர் தேசிய தைப் பொங்கல் என தமிழர் தாயகத்தில் காலடி வைக்கின்றார் என்றே கேட்கின்றோம்.

தமிழர்களின் தேசிய பாதுகாப்பிற்காக போராடி உயிர்த்தியாகமானோரை சொந்த மண்ணிலே நினைவு கூர முடியாது. இறுதி யுத்தத்தில் வான் தாக்குதலாலும், நச்சு குண்டுகளாலும் படுகொலை செய்யப்பட்டோரை கூட்டாக நினைவு கூருவதற்கு முடியாதுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர்க்கு நீதி இல்லை. தமிழர் தேச தேசியத்தின் உயிர்த் துடிப்போடு இயங்கியவர்கள் அரசியல் கைதிகளாகி விடுதலை இன்றி வாடுகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணர்களில் ஒருவரான தற்போதைய அதிபர் தேசிய தைப்பொங்கல் என தமிழர்கள் மத்தியில் வந்து உழைப்பின் விழாவை பாரம்பரிய தேசிய நிகழ்வை அசிங்கப்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.

அத்தோடு தேசிய தைப்பொங்கல் என தமிழர்களை கூட்டுச் சேர்க்கும் செயற்பாட்டிலும் பல அரசியல் கைக்கூலிகள் நம்மத்தியிலே தோன்றி இயங்கத் தொடங்கியுள்ளனர்.

இது இவர்களின் அரசியலாகும் இவர்கள் காலாகாலமாக எமக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர். இத்தகைய புல்லுருவிகளை அகற்றி தமிழர் தாயக அரசியலை காப்பதற்கு உறுதி கொண்டு நிலம் காக்கும் பொங்கல் எம் மண்ணிலே பொங்க சக்தி கொள்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here