மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் இணைந்து மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக்கூட்டமைப்பு இம்முறை தனித்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதன் பிரதான நோக்கமானது 2018 ஆம் ஆண்டு தேர்தல் முறைமை காரணமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாத்திரம் தனித்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையில் எந்த பிரச்சினையும் இல்லை.உதாரணமாக மன்னார் நகர சபையில் நாங்கள் ஒரு வட்ட தாரத்தை தவிர மிகுதி வட்டாரங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றி இருந்தது.
ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களால் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டு வேறு கட்சியை சேர்ந்தவர்களை அழைத்தே நாங்கள் ஆட்சி அமைத்தோம்.
அதன் காரணமாகவே தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுவதாகவும்,வெற்றி பெற்று வருகின்ற உறுப்பினர்கள் ஒன்றாக ஆட்சியமைப்பதாகவும்,கடந்த 3 மாதங்களுக்கு முன்போ எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடிக்கதைத்தோம்.
அதனடிப்படையில் கட்சிகள் முடிவெடுத்துள்ளது.ஒவ்வொரு வட்டாரத்திலும் மூன்று கட்சிகள் சார்பாக போட்டியிட்டால் குறித்த மூன்று கட்சி சார்பாகவும் வாக்களிக்குமாறு தெரிவிப்போம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் இணைந்து மன்னார் மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றும் ”என அவர் மேலும் தெரிவித்தார்.