“பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியே ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொண்டது. அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் கடும் நெருக்கடிகளை இலங்கை சந்திக்க நேரிடும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு இன்று காலை வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சியில் பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரசல்ஸ் சென்று ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம்

Ranil Wickremesinghe

இதன்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதமும் அது நீக்கப்படும் வரை அந்தச் சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டிருந்தது.

இதையடுத்தே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றது.

எனினும், உறுதிமொழி தற்போது மீறப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

ஜெனிவா கூட்டத்தொடர்

United Nations

இதன் தாக்கம் ஜெனிவா கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். போராட்டக்காரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டில் உள்ள சாதாரண சட்டம் போதுமானது.

வன்முறை என்பது தவறு தான். ஆனால், எல்லா வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கையாக அமையாது.

குறிப்பாக தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் அலுவலகங்கள் தாக்கப்படும். அது பயங்கரவாத நடவடிக்கையா?

போராட்டக்களத்தில் இருந்த முன்களப் போராளிகள் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வேட்டையாடப்படுகின்றனர். இது தவறான அணுகுமுறையாகும்.

அவசரகாலச் சட்டத்தை மாதாந்தம் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன்தான் நீடிக்க வேண்டும். சிலவேளை 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்காமல் இருக்கலாம் என்பதற்காகவும் வழங்கிய வாக்குறுதியை மறந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது” என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here