யாழ்ப்பாணத்தில் பொது மக்கள் வீதி மறிப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் வழங்க கோரியே ஏ9 வீதியை வழிமறித்து இன்று(12) காலை 9 மணியளவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அறிவிப்பு
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளதோடு வீதி மறிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து தடை
மக்களின் இந்த போராட்டத்தினால் ஏ9 வீதி வழியான போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.
திருகோணமலை
திருகோணமலையில் சுகாதார ஊழியர்கள் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் கடமையாற்றி வரும் சுகாதார திணைக்கள ஊழியர்களே இன்று (12) கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தை கிண்ணியா தள வைத்தியசாலை ஊழியர்கள், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
கோரிக்கைகள்
தங்களுக்கு தூர இடங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு செல்ல முடியாது, தமக்கு கிண்ணியா பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிர் காக்கும் போது முன்னிலையில், பெட்ரோல் வரிசையில் பின்னிலையில், வழங்கு வழங்கு பெட்ரோல் வழங்கு போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தீர்வு
ஆர்ப்பாட்டக்காரர்கள் இது தொடர்பாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கனியுடன் கலந்துரையாடியுள்ளதோடு மனு ஒன்றியனையும் கையளித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு இந்த மனுவை அனுப்பி வைப்பதாக பிரதேச செயலாளர் போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.