திசைதிருப்பவேண்டாம்
இலங்கையின் தற்போதைய மிகவும் சவாலான பொருளாதார நிலைமை, நாட்டின் மனித உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளை திசை திருப்பவேண்டாம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் நாடாளுமன்ற வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் துணைச் செயலர் விக்கி ஃபோர்ட், கடந்த செவ்வாயன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இதனை குறிப்பிட்டார்.
நாட்டின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் அதேநேரம், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
உன்னிப்பாக அவதானிப்போம் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடினமான மனித உரிமைகள் நிலைமை மற்றும் மோதலுக்குப் பின்னரான பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இன்மை போன்றவற்றை ஐக்கிய இராச்சியம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
இந்தநிலையில் தற்போதைய பொருளாதார நிலைமை மனித உரிமை மேம்படுத்தலை திசை திருப்பாமல் இருப்பது முக்கியம்.
எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 46/1 உடன் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கத்தை தாங்கள் வலியுறுத்துவதாக இங்கிலாந்தின் நாடாளுமன்ற வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் துணைச் செயலர் விக்கி ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.