அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி மீது கொழும்பு – கோட்டை, இலங்கை வங்கி வீதியில் வைத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சைத்தியம் வீதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி மாவத்தை, முதலிகே மாவத்தை ஆகிய பகுதிகளில் பிரவேசிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
எனினும், நீதிமன்ற உத்தரவை மீறி அங்கு மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு – விகாரமகாதேவி பூங்கா பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மாணவர் பேரணியானது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம பகுதிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
கோட்டாகோகமவில் உள்ள நூலகத்திற்கு சில புத்தகங்களை குறித்த மாணவர்கள் கையளிக்கவுள்ளதாகவும் தெரியவந்திருந்தது.
இந்த நிலையிலேயே பெருந்திரளான மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.