வங்கக்கடலில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகக் கடல் அலையில் உயரமும் வேகமும் அதிகரித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.

தாழ் அமுக்கம் காரணமாகக் கடல் அலை வழமைக்கு மாறாக முன்னோக்கி வந்துள்ளமையால் கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது உடைமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் கடற்தொழிலாளர்களின் தங்குமிடம் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடும் பகுதிகளைக் கடல் அலைகள் சூழ்ந்துள்ளதுடன், போக்குவரத்து மேற்கொள்ளும் பாதைக்கு அருகாமையில் கடலலை வந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் கடற்தொழிலாளர்கள் தங்களது படகுகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு இழுத்துச் செல்வதுடன், கடலின் அலை அதிகம் வருவதால் கடற்தொழிலாளர்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

வழமைக்கு மாறாகக் கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்து கடல் நீர் கடற்கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள நிலப் பகுதிக்குள்ளும் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்துக்குள்ளும் கடல் நீர் உட்புகுந்துள்ளது.

நிந்தவூர், அக்கரைப்பற்று, மருதமுனை, பெரியநீலாவணை, காரைதீவு பகுதியில் கடல்நீர் கடற்கரைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பிரதான காபட் வீதியையும் தாண்டி நிலப்பரப்பில் புகுந்தமையினால் கடற்கரையில் தரித்து வைக்கப்பட்ட படகுகள், சிறிய ரக வள்ளங்கள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் போன்றன கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு, கதிரவெளி, வாகரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மூவரும் முல்லைத்தீவு – அளம்பில், செம்மலை கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவரும் அம்பாறை – மருதமுனை பகுதியில் இரு நண்பர்களும் கடலில் குளிக்கச்சென்ற நிலையில் சமகாலத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்: கடற்தொழிலாளர்கள் பாதிப்பு (Photos)

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்: கடற்தொழிலாளர்கள் பாதிப்பு (Photos)

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்: கடற்தொழிலாளர்கள் பாதிப்பு (Photos)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here